search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி
    X

    கபிஸ்தலம் அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி

    கபிஸ்தலம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக வடசறுக்கை கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அர்ஜூன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் 2 ஊழியர்கள் விற்பனையை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு புறப்பட்டனர். 

    அப்போது கடையில் விற்பனையான பணம் ரூ.3 லட்சத்தை ஒரு பையில் வைத்திருந்தனர். கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் மெயின்ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அர்ஜூன் உள்பட 3 பேரையும் வழி மறித்தனர். இதனால் வண்டியை நிறுத்தினர்.

    அந்த சமயத்தில் திடீரென அந்த கும்பல் அர்ஜூன் உள்ளிட்ட 3 பேரும் மீதும் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலைகுலைந்து போன அவர்கள் கண் எரிச்சலால் அலறினர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    நள்ளிரவில் நடுரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த துணிகர சம்பவம் பற்றி டாஸ்மாக் சூப்பர் வைசர் ராஜசேகர் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×