search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கிராம மக்கள் அவதி- வயல் வழியாக உடலை கொண்டு செல்லும் அவலம்
    X

    சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கிராம மக்கள் அவதி- வயல் வழியாக உடலை கொண்டு செல்லும் அவலம்

    ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல் வழியாக உடலை கொண்டு செல்லும் அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வடதில்லை. இங்கு 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் யாராவது இறந்து விட்டால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரணி ஆற்று கரையில் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் கிராமத்திலிருந்து சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை இல்லை.

    இந்த நிலையில் யாராவது இயற்கை எய்தினால் பிரேதத்தை வயல் வெளி வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது. இப்படி வயல் வெளி வழியாக பிணம் எடுத்து செல்லும் போது விவசாயிகள் ஆட்சேபனை தெரிவிப்பதால் அடிக்கடி தகராறு நடந்து வருகிறது.

    எனவே சுடுகாட்டுக்கு தனி பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி நகல்களை பூண்டி வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து வக்கீல்குமார் தலைமையில் கிராம மக்கள் சிலநாட்களுக்கு முன் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி ஆகியோரிடம் சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை அமைத்து தர மனு அளித்தனர்.

    இந்த நிலையில் வடதில்லை கிராம தி.மு.க. கிளை தலைவர் ராஜா நேற்று காலை மரணமடைந்தார். உடலை வயல் வெளியாக கொண்டு சென்ற போது விவசாயிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    இதே போன்று அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்திலும் சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை இல்லை. இந்த கிராமத்திலும் யாராவது இறந்து போனால் வயல் வெளியாகத்தான சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்ல வேண்டி உள்ளது.

    எனவே இந்த கிராமத்திலும் சுடுகாட்டுக்கு செல்ல தனிபாதை அமைத்து தர அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×