search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன் - குழந்தைகள் தின விழாவில் கமல் பேச்சு
    X

    சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன் - குழந்தைகள் தின விழாவில் கமல் பேச்சு

    என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ChildrensDay
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பேசி வரும் அவர் இன்று குழந்தைகள் தினத்தையொட்டி கதீட்ரல் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.

    லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் இந்த பள்ளிகளுக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்த பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்கு பாடமாக இருந்தது. நானும் இந்த பள்ளியில் வெளியில் உள்ள மாணவன் என்றால் மிகையாகாது.



    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பல் மடங்கு முன்னேறிவிடும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இதற்கு ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இங்கு வந்துசெல்லும் போதெல்லாம் என் மனதை இறுகும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் சந்தோ‌ஷம் தொடரட்டும். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள். அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும்.

    ஆட்டத்துடன் சம்பந்தப்பட்டவன் நான். இங்கு நடனம் ஆடிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கு வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவில் பாடிய பாடல் இன்று எனக்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள். அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும்.

    புகழ் எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் எனக்கு சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    முன்னதாக விழாவில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். கமல் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கமல் நடிப்பில் இடம்பெற்ற உன்னால் முடியும் தம்பி பாடலையும் பாடினார்கள்.

    சக்தி என்னும் மாணவர் கமலிடம் பார்வைத் திறனற்றவர்களுக்கு படிக்க உதவும் பிரெய்லி புத்தகங்களை அச்சிடும் கருவி பழுதாகி விட்டதாகவும் அதனை தங்களுக்கு வாங்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார். கமல் அந்த வேண்டுகோளை ஏற்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்து தருவிப்பேன் என்று உறுதி அளித்தார். #KamalHaasan #ChildrensDay

    Next Story
    ×