search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் காரணமாக நாகையில் இன்று காலை கடல் அலைகள் உயரே எழுப்பி சீற்றத்துடன் காணப்பட்டதை படத்தில் காணலாம்
    X
    கஜா புயல் காரணமாக நாகையில் இன்று காலை கடல் அலைகள் உயரே எழுப்பி சீற்றத்துடன் காணப்பட்டதை படத்தில் காணலாம்

    கஜா புயல் எதிரொலி- நாகைக்கு தேசிய பேரிடர் குழுக்கள் இன்று வருகை

    கஜா புயலை எதிர்கொள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவுள்ளனர். #Gaja #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 10-ந் தேதி உருவானது. இதையடுத்து தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கஜா புயல், நாகைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என முதலில் கூறப்பட்டது. தற்போது கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே திசை மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகைக்கு 850 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் காரணமாக தஞ்சை , நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் வருகிற 15-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்தில் இன்றும் 2-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கலெடர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் புயல் மற்றும் மழை பற்றி தகவல்களை அறிய 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    நாகை மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 9 பல்நோக்கு பேரிடர் மையங்களும், 22 புயல் பாதுகாப்பு மையங்களும் , பள்ளி- கல்லூரிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 627 கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தீயணைப்பு துறை மூலம் தலா 10 பேர் அடங்கிய 9 குழுக்களும், காவல் துறை மாநில பேரிடர் பயிற்சி காவலர்கள் 10 பேர் வீதம் 8 குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய துறை சார்பில் 6 ஆயிரம் மின்கம்பங்களும், மீன்வளத்துறை சார்பில் 54 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் மணல் மூட்டைகளும், 56 மரம் அறுக்கும் கருவிகளும், 90 பொக்லைன் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

    அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் நாகை மாவட்டத்திற்கு வரவுள்ளனர். அவர்கள் இன்று மாலை நாகைக்கு வந்து அதன் பின்னர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    Next Story
    ×