search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    90 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நாளை இரவு தாக்கும்- தயார் நிலையில் மீட்பு குழுக்கள்
    X

    90 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நாளை இரவு தாக்கும்- தயார் நிலையில் மீட்பு குழுக்கள்

    கஜா புயல் நாளை நள்ளிரவே தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    சென்னை:

    அந்தமான் அருகே கடந்த வாரம் தீபாவளிக்கு மறுநாள் அதாவது 7-ந்தேதி புதன்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

    கடந்த வாரம் இறுதியில் அது காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. முதலில் அதன் திசை ஒடிசா மாநிலத்தை நோக்கி இருந்தது.

    கடந்த சனிக்கிழமை அதன் திசை சென்னை நோக்கி திரும்பியது. பிறகு அது சென்னைக்கும் நாகைக்கும் இடையே வரும் வகையில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அது புயல் சின்னமாக மாறியது. இதையடுத்து அந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இது இலங்கை அளித்த பெயராகும்.

    நேற்று மதியம் கஜா புயல் சற்று வலுப்பெற்றது. ஆனால் புயலின் நகரும் திசை மேலும் தென் பகுதி நோக்கி திரும்பியது. இதனால் கஜா புயல் தாக்கும் அபாயத்தில் இருந்து சென்னை மற்றும் வடமாவட்டங்கள் தப்பின.

    நேற்று பிற்பகல் நிலவரப்படி கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வகையில் நகர்ந்தது. தற்போது அந்த புயல் தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. நேற்று கஜா புயல் மிக, மிக மெல்ல 5 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்தது.


    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கஜா புயல் நகர்வு வேகம் 7 கி.மீட்டராக அதிகரித்தது. ஆனால் 8.30 மணிக்குப் பிறகு 6 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்து வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கஜா புயல் சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 730 கி.மீ. தொலைவில் இருந்தது.

    நாகையில் இருந்து வடகிழக்கே சுமார் 820 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.

    இன்னும் 24 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி கஜா புயல் இன்று அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் கஜா புயலின் நகரும் வேகம் இனி அதிகரிக்கும். இன்று காலை முதல் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புக் காணப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை)யும் கஜா புயல் அதி தீவிர புயலாக நீடிக்கும். நாளை பிற்பகல் கஜா புயல் தமிழக கடலோரத்தை நெருங்கும். எனவே நாளை காலை முதல் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். இயல்பான காற்று வீசும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது.

    இந்த நிலையில் கஜா புயல் நாளை (புதன்கிழமை) நள்ளிரவே தமிழக கடலோர பகுதியை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும். தமிழக கடலோரத்தை கஜா புயல் நெருங்கியதும் அதன் வேகம் அதி தீவிர நிலையில் இருந்து சாதாரண வலு குறைந்த புயலாக மாறி விடும்.

    என்றாலும் புயல் கரையைக் கடக்கும்போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். சில சமயம் காற்றின் வேகம் 100 கி.மீ. ஆகவும் இருக்கும். புயல் கரையை கடக்கும் போது வேகம் குறைவதால் அது நாளை நள்ளிரவு தொடங்கி வியாழக்கிழமை மதியம் வரை கரையைக் கடக்கும்.

    புயல் கரையைக் கடக்கும் போது 7 மாவட்டங்களிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். சில பகுதிகளில் 20 முதல் 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை இயல்பை விட ஒரு மீட்டர் உயரம் எழும்பும்.


    புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்யும். கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும். எனவே மீனவர்களும், கடலோரப் பகுதி மக்களும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர் - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்போது திசை மாற்றம் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா உள்பட வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. காற்றின் வேகம் மற்றும் திசையைப் பொறுத்து இதிலும் மாற்றம் வரலாம்.

    15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புயல் கரையை கடந்த பிறகு புயலின் வேகம் குறைந்து விடும். தமிழ்நாட்டுக்குள் தரைப் பகுதிக்குள் வந்ததும் புயல் பலவீனம் அடையும். குறைந்த காற்றழுத்தமாக மாறி விடும்.

    அந்த நிலையில் அந்த குறைந்த காற்றழுத்தம் கேரளா வழியாக 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அரபிக் கடல் பகுதிக்குள் சென்று விடும். அன்றே அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கலைந்து விடும்.

    கஜா புயல் நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் முற்பகல் வரை கரையை கடக்கும் போது பலத்த மழையும், அதிவேக சூறாவளி காற்றும் வீசும் என்பதால் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 மீட்புக் குழுக்கள் நாகை மாவட்டத்துக்கும், 2 குழுக்கள் சிதம்பரத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர முதன்முறையாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்புப் படைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. 4400 இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் கூடுதல் அரசு ஊழியர்கள், மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே புயல்- மழை பாதிப்புப் பகுதிகளில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே உதவிகள் செய்ய கடலோர காவல் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 8 கப்பல்கள் இதற்காக தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மூன்று கடலோர காவல் படை விமானங்களும் தயாராக உள்ளன.

    மொத்தத்தில் கஜா புயலை எதிர்கொள்ள 30,500 பேர் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்க சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    குடிநீர், உணவுப் பொருட்களும் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆவின் பால் வினியோகம் தங்கு தடையின்றி நடக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மண் மூட்டைகளுடன் அரசு அதிகாரிகளும், மின் உபகரணங்களுடன் மின்சார வாரிய ஊழியர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். எனவே கஜா புயல் எந்த சீற்றத்துடன் வந்தாலும் சமாளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    Next Story
    ×