search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவின் புதிய தொலைக்காட்சி நியூஸ் ஜெ நாளை தொடக்கம்
    X

    அதிமுகவின் புதிய தொலைக்காட்சி நியூஸ் ஜெ நாளை தொடக்கம்

    அ.தி.மு.க.வின் புதிய தொலைக்காட்சி சேனலான நியூஸ் ஜெயின் தொடக்க விழா நாளை மாலை நடைபெறுகிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைக்கின்றனர். #NewsJ
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டி.வி.யும், அ.தி.மு.க. நாளேடாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையும் இருந்தது.

    இவை இரண்டும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானது என்பதால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்றதும் கட்சி நிகழ்ச்சிகள், அ.தி.மு.க. ஆட்சி தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு தனியாக பத்திரிகை, தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நமது அம்மா பத்திரிகை தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் சிலரின் உறவினர்கள் இந்த பத்திரிகையை நிர்வகித்து வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ‘நியூஸ் ஜெ’ தொடங்கப்படுகிறது. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதா கிருஷ்ணன் இதன் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

    ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் லோகோ மற்றும் இணையதளம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.


    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இதை அறிமுகப்படுத்தினார்கள்.

    அப்போது விரைவில் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான விழா நடைபெறுகிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைக்கின்றனர். #ADMK #NewsJ #Edappadipalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×