search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலை எதிர்கொள்ள சென்னையில் போலீஸ் உஷார்
    X

    கஜா புயலை எதிர்கொள்ள சென்னையில் போலீஸ் உஷார்

    கஜா புயலை எதிர்கொள்ள சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். #Gaja #Storm #ChennaiRain #RedAlert

    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வருகிற 15-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் தாக்குதலின்போது சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    14, 15 ஆகிய 2 நாட்களுமே புயலின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வட கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த மழை பெய்யும்போது அதிகமாக தண்ணீர் தேங்கக் கூடிய இடங்கள் எவை என்பதை கணக்கில் எடுத்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளுக்குள் மழை நீர் செல்லக்கூடிய பகுதிகளை வருவாய் துறையினரோடு கலந்து ஆலோசித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    அதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக தங்க வைப்பதற்காக பள்ளிக்கூடங்கள், சமூக நலக்கூடங்களையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளவும் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை தகவல் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    வர்தா புயல் பாதிப்பின் போது சென்னையில் பல்வேறு இடங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், மரங்களும் வேரோடு சாய்ந்தன.

    இந்த முறையும் அது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து அசம் பாவிதங்களை தடுக்க தேவையான நடவடிக்கை களை போலீசார் மேற் கொண்டுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    14, 15 ஆகிய 2 நாட்களும் சுமார் 15 ஆயிரம் போலீசாரை சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தால் அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் வகையில் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறை இயக்குனர் மகேந்திரன், உத்தரவின் பேரில் கூடுதல் இயக்குனர் சாகுல் அமீது இதற்கான பணிகளை செய்துள்ளார்.

    அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் இருந்து மக்களை வெளியில் பத்திரமாக மீட்டு வருவதற்கான உபகரணங்களும் தீயணைப்பு துறையில் போதுமான அளவு உள்ளது.

    தீயணைப்பு வண்டிகளில் இவைகளை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert

    Next Story
    ×