search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே பன்றி காய்ச்சலுக்கு ஆசிரியை பலி
    X

    தேனி அருகே பன்றி காய்ச்சலுக்கு ஆசிரியை பலி

    தேனி அருகே பன்றிக்காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயா (வயது 43). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு யுவன் பிரசன்னா (19) என்ற மகனும் சஞ்சனா (14) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை ஜெயா, அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் நிறைவுமதி, யாசிகா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் ஜெயா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மற்றவர்கள் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மற்ற 4 பேரின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியை ஜெயாவின் மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே அவர்கள் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. அதில் ஒருவர் இறந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×