search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    33 வழித்தடங்களில் செல்லும் அரசு விரைவு பஸ்களை போக்குவரத்து கழகங்களுக்கு மாற்ற முடிவு
    X

    33 வழித்தடங்களில் செல்லும் அரசு விரைவு பஸ்களை போக்குவரத்து கழகங்களுக்கு மாற்ற முடிவு

    33 வழித்தடங்களில் செல்லும் அரசு விரைவு பஸ்களை போக்குவரத்து கழகங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. #TNGovtBus #Bus

    சென்னை:

    நீண்ட தூரம் பயணம் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் அரசு பஸ்களும் மற்ற மாவட்ட தலை நகரங்களுக்கு செல்கின்றன.

    இதனால் பகலில் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக 300 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குறைவாக செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் வருமான இழப்பு ஏற்படுகிறது.

    எனவே இந்த வருமான இழப்பை சரி கட்டுவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்களை இயக்கு வதை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட தூர வழித்தடங்களில் மட்டும் அரசு விரைவு பஸ்களை இயக்கலாம். மற்ற வழித்தடங்களை அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்கே விட்டுக் கொடுக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி குறைந்த தூரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து பஸ்களை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. போக்குவரத்து கழக பஸ்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    அரசு விரைவு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பும் தவிர்க்கப்படும். எனவே வருமான இழப்பு ஏற்படும் 33 வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும். இதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் இந்த வழித்தட பஸ்கள் இயக்கப்படும

    அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூரங்களுக்கு மட்டும் இயக்கப்படும். வெளி மாநிலங்களுக்கும் கூடுதலாக 50 அரசு விரைவு பஸ்களை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சென்னையில் மாநகர பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. நகரின் விரிவாக்க பகுதிகளுக்கும் தனி பஸ்கள் செல்கின்றன. இதில் பல இடங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

    எனவே சென்னை நகரில் 40 மாநகர பஸ் வழித் தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இது பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. #TNGovtBus #Bus

    Next Story
    ×