search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
    X

    கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

    கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Gajastorm

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் காரணமாக வட தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 14-ம் தேதி பலத்த மழையும், 15-ம் தேதி ஒரு சில இடங்களில் மட்டும் மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசின் மோசமான கடந்த காலம் காரணமாக புயல், மழை என்பன போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே மக்களின் உடல்கள் அச்சத்தில் நடுங்கத் தொடங்குகின்றன.

    இயற்கையை கட்டுப்படுத்துவதோ, அதன் சீற்றத்தை தடுத்து நிறுத்து வதோ எந்த சக்தியாலும் இயலாதது ஆகும். கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களின் உதவியுடன் புத்திசாலித்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்புகளை ஓரளவு கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியமாகும்.


    சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த முன் எச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் முன்னெச்சரிக்கைப் பணியாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படைகளை நிறுத்த வேண்டும்.

    வடமாவட்டங்களில் ஒன்றியத்துக்கு ஓர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வீதம் நியமித்து எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு சேதத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவையான எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.

    புயல் மழைக்காலங்களின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை எவை, செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அம்மாநில அரசாங்கம் மிகச்சிறப்பாக சமாளித்தது. தேவைப்பட்டால் அம்மாநில அதிகாரிகளின் ஆலோசனையையும் பெறலாம்.

    புயல் தாக்கிய பின் பாதிப்புகளை சரி செய்வதை விட, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது என்பதால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதன்மூலம் கஜா புயலால் தமிழகத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #Gajastorm

    Next Story
    ×