search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி கற்பழித்து கொலை: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X

    மாணவி கற்பழித்து கொலை: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    அரூர் அருகே மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தில் விடுமுறைக்காக வந்திருந்த மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    மாணவியின் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட கயவர்கள் மட்டுமின்றி காவல்துறையும், அரசு நிர்வாகமும் சேர்ந்தே பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த மாணவிக்கு எந்தவிதமான மருத்துவமும் வழங்காமல், வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர், அத்துடன் தங்களின் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக் கொண்டனர்.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவில்லை.

    காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மோசமடைந்த நிலையில் மிகவும் தாமதமாகவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆனால், அங்கு தீவிர மருத்துவம் அளித்தும் பயனின்றி உயிரிழந்துள்ளார். மிகக்கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளான மாணவியைக் காப்பாற்றும் வி‌ஷயத்தில் அக்கறையும், சமூகப் பொறுப்பும் இல்லாமல் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்ட காவல்துறை உள்ளிட்ட அனைவரின் செயலும் கண்டிக்கத்தக்கது.


    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மிகவும் அலட்சியம் காட்டி வருகிறது. இந்தக் கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இன்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இரு குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷின் தாயார் அப்பகுதியில் அரசு மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இதற்காக கோட்டைப்பட்டி காவல்துறையினருக்கு கையூட்டு தருவதாகவும், அதனால் தான் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்புகார் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத் தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் அம்மாணவிக்கு இத்தகையக் கொடுமை நிகழ்ந்திருக்காது. மலைவாழ் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை கட்டித்தருவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அத்திட்டங்களை செயல்படுத்தித் தராததும் இதற்கு காரணம் ஆகும். அந்த வகையில் மாணவியின் சாவுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DharmapuriGirlStudent #GirlMolested #PMK #AnbumaniRamadoss
    Next Story
    ×