search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை ஒழிக்கவே அனைத்து கட்சிகளும் திரளுகின்றன- குஷ்பு
    X

    மோடியை ஒழிக்கவே அனைத்து கட்சிகளும் திரளுகின்றன- குஷ்பு

    ஏமாற்றும் கட்சியும், ஏமாற்றுகிற தலைவரும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள்வதாக குஷ்பு தெரிவித்துள்ளார். #Congress #Kushboo #Modi #ParliamentElection
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    மோடி அரசின் தவறான முடிவுகளால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து இருப்பதையும், மொத்த அதிகார மையமாக மோடி இருப்பதையும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    அதாவது நாடு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக எச்சரித்து இருக்கிறார். உலக அளவில் மிகச்சிறந்த பொருளாதார மேதை அவர். அதேபோல் மிகச்சிறந்த பொருளாதார மேதைகளான மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரும் ஆரம்பத்திலேயே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றின் எதிர்விளைவுகள் நாட்டை பாதிக்கும் என்று கூறினார்கள். ஆனால் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக நாட்டு மக்களை நசுக்கினார்.

    ரகுராம்ராஜன், மன்மோகன் சிங், ப.சிதம்பரத்தை விட மோடி, ஜெட்லி, அமித்ஷா எல்லாம் பொருளாதாரம் படித்த மேதைகளா?

    இந்த தீய சக்தி அழிக்கப்பட வேண்டும். திரும்பி வரக்கூடாது என்பதில் எல்லா கட்சிகளும் கவனமாக இருக்கின்றன. ஏமாற்றும் கட்சியும், ஏமாற்றுகிற தலைவரும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு வருகின்றன.

    பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் வராதா? நிலையான ஆட்சியை கொடுக்க முடியுமா? என்கிறீர்கள். முதலில் இந்த தீய ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் எல்லோருக்கும்.

    அதன்பிறகு தலைவர்கள் கூடி பேசி பிரதமரை தேர்வு செய்வார்கள். அது ஒரு பிரச்சனையே இல்லை. எங்களை பொறுத்தவரை ராகுல் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். கட்சி தொண்டர்களுக்கு இது இயல்பு தானே.


    அவசரப்பட்டு எதைப் பற்றியும் யோசிக்காமல் மோடி எடுத்த நடவடிக்கையால் மக்களுக்குதான் பிரச்சனை. சிறு சிறு தொழில் செய்தவர்கள், ஓரளவு பொருளாதார வசதியுடன் இருந்தவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள். சாதாரண மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

    காங்கிரஸ் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய உழைப்போம். அதிகமான வெற்றியை ஈட்டுவதன் மூலம் காங்கிரசாரின் எண்ணம் நிறைவேறும்.

    தமிழகத்தில் காங்கிரசுக்குள் நிலவும் கோஷ்டி பூசலால் தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படாது. திருநாவுக்கரசர், இளங்கோவன் இடையேயான மோதல் பற்றி நான் பேசக்கூடாது. தமிழகத்திற்கு என்று பொறுப்பாளர்களை கட்சி மேலிடம் நியமித்துள்ளது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    இங்குள்ள நிலைமையும், என்ன நடக்கிறது என்பதும் ராகுல்காந்திக்கு தெரியும். அவரே நேரடியாக முடிவு செய்வார்.

    தற்போது 5 மாநில தேர்தல்களில் தீவிரமாக இருப்பதால் வேறு எந்த பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தமாட்டார்கள். தேர்தல் முடிந்த பிறகு எல்லா பிரச்சனைகளுக்கும் ராகுல் தீர்வு காண்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo #Modi #ParliamentElection
    Next Story
    ×