search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையான்குடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி - கலெக்டர் ஜெயச்சந்திரன் வீடு வீடாக ஆய்வு
    X

    இளையான்குடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி - கலெக்டர் ஜெயச்சந்திரன் வீடு வீடாக ஆய்வு

    இளையான்குடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியில் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரன் வீடு, வீடாக சென்று நேரில் ஆய்வு செய்தார்.
    சிவகங்கை:

    இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் அவர் இளையான்குடி அருகே உள்ள பூச்சியேந்தல் பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் வீடுகளில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

    பின்னர் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்படுகிறதா என்ற விவரம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:- தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் வீடுகள் மற்றும் தெருக்களை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தண்ணீர் குடம் மற்றும் நீர் தேக்கும் தொட்டிகளை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    அதேபோல் நீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இது தவிர வீட்டில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. அவ்வாறு தேக்கி வைத்தால் அதில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உருவாகும் நிலை ஏற்படும். எனவே அவ்வப்போது வீட்டின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதேபோல் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறி ஏதும் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கும் வழங்கும் தண்ணீரில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து அத்துடன் அங்குள்ள விளம்பர பலகையில் சுத்தம் செய்யப்பட்ட தேதி மற்றும் சுத்தம் செய்யப்பட வேண்டிய தேதி ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும் வகையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புத்துரை, அழகுமீனாள், பூச்சியில் வல்லுனர் ரமேஷ், டாக்டர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சரவணக்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×