search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுட்காலம் வரை பா. ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை- தினகரன் பேச்சு
    X

    ஆயுட்காலம் வரை பா. ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை- தினகரன் பேச்சு

    ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #bjp
    தேனி:

    ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி தேனி ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க.வின் சார்பில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.  அவருடன் அக்கட்சியின் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதத்தினை முடித்து வைத்துள்ளார்.  அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் முன் பேசும்பொழுது, இந்த உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

    எப்பொழுது தேர்தல் வந்தாலும் மக்கள் மாற்றத்தினை கொண்டு வர தயாராகி வருகின்றனர்.  ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர்.

    ஆண்டிப்பட்டியில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் ஆர்.கே. நகரில் முடிவடையும்.  துரோகிகளிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது.  அதனால் குக்கர் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்து உள்ளனர்.

    ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும், நாங்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்போம்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் என்ன தவறு செய்தனர் என ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்பர்.  18 தொகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போது ஆட்சி செய்பவர்கள் நிறைவேற்றவில்லை.  நியூட்ரினோ திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.  ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை.  அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என கூறினார். #dinakaran #bjp 
    Next Story
    ×