search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
    X

    திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

    சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #Stalin
    சென்னை:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

    ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

    முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஆகியோரை நேற்று சந்தித்தார். 



    இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று மாலை திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    அவருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது துரை முருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர். 

    பாஜகவுக்கு எதிராக ஓரணியில் சேர்வது குறித்து ஸ்டாலினும், நாயுடுவும் ஆலோசனை நடத்தினர். #ChandrababuNaidu #Stalin
    Next Story
    ×