search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை - 2 வீடுகளில் புகுந்து 38 பவுன் நகை திருட்டு
    X

    கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை - 2 வீடுகளில் புகுந்து 38 பவுன் நகை திருட்டு

    கோவையில், 2 வீடுகளில் மர்ம ஆசாமிகள் புகுந்து 38 பவுன் நகையை திருடி சென்றனர். மேலும் கத்திமுனையில் பெண்ணிடம் நகையை வழிப்பறி செய்து கைவரிசை காட்டினார்கள்.
    கோவை:

    கோவையில் சமீபகாலமாக சங்கிலி பறிப்பு சம்பவங்கள், வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிரித்துள்ளன. இதற்கு காரணம் போலீசார் முறையாக ரோந்து செல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் 3 இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

    கோவை கோணவாய்க்கால்பாளையம் வெள்ளலூர் சாலையை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் குடும்பத்தோடு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப் பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஜெகநாதன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீடு புகுந்து தங்க நகையை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டை விட்டு வெளியூர் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால். இவர் விவசாயத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாந்தாமணி (51). இவர்கள் திருக் கடையூருக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பஸ்சில் சிங்காநல்லூர் வந்தனர். அவர்கள் வீடு திரும்புவதற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வீடு அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் வேகமாக வந்து ஆட்டோவை வழிமறித்தனர். இதனால் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சிஅடைந்தார்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சாந்தாமணி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் 2 வீடுகளுக்குள் புகுந்து 38 பவுன் நகைகள் மற்றும் பெண்ணிடம் வழிப்பறி செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசிதேடி வருகிறார்கள்.
    Next Story
    ×