search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதலமைச்சரை சந்திப்பேன்- திருமாவளவன்
    X

    மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதலமைச்சரை சந்திப்பேன்- திருமாவளவன்

    ஆத்தூரில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோருடன் விரைவில் முதல்-அமைச்சரை சந்திப்பேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ViduthalaiChiruthaigalkatchi #Thirumavalavan
    சேலம்:

    சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி கிராமத்தில் 8-ம் வகுப்பு மாணவி ராஜலெட்சுமி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை கண்டிக்கத்தக்கது. அதே பகுதியை சேர்ந்த வாலிபர் தினேஷ் குமார் (26) என்பவர் ராஜலெட்சுமியை அவரது தாய் கண்முன்பே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இந்த வழக்கை பெண் டி.எஸ்.பி. தலைமையில் விசாரிக்க வேண்டும்.

    சேலம் மாவட்டம் முதல்-அமைச்சருடைய சொந்த மாவட்டம். இதனால் நானும், ராஜலெட்சுமியின் பெற்றோரும் விரைவில், முதல்-அமைச்சரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வருகிறார்கள். குறைந்தது ஒரு ஆண்டு ஜாமீன் கிடையாது. தற்போது ஒரு மாதத்தில் ஜாமீனில் வருகிறார்கள்.

    தினேஷ்குமார் மீதான வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

    சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் தரப்பில் அவர்களுக்கு வாதாட நேர்மையான அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் முதல்-அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    காவல் துறையினர் தினேஷ் குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. சிறுமியை கொலை செய்தவுடன், அங்கு இருசக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த மைத்துனர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் இந்த கொலையை முன் கூட்டியே திட்டமிட்டு செய்தார்களா? எண்ணும் அளவிற்கு உள்ளது.

    தலையை துண்டித்து ஏன் வீட்டிற்கு கொண்டு வந்தாய்? வீதியில் வீசு என்று அவரது மனைவி கூறியதாக உறவினர்கள் தரப்பில் சொல்கிறார்கள். எனவே அவரது மனைவி மற்றும் சகோதரரிடம் போலீசார் விசாரிக்க வேண்டும்.

    இந்த வழக்கை கால தாமதம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும். ஒருவர் மீது மட்டும் வழக்குப் போட்டு முடிக்கக் கூடாது.


    முதல்-அமைச்சர் இந்த பிரச்சனையில் ஏதாவது கருத்து சொல்வார் என்று நினைத்தேன். தலித் பாதிக்கப்பட்டால் யாரும் வாய் திறப்பதில்லை. சிறுமி கொலையை யாரும் கண்டிக்கவில்லை. முதல்-அமைச்சர் அமைதியாக உள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் விரும்பும் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். மக்களுக்கு பா.ஜ.க. அரசு ஒன்றும் செய்யவில்லை. மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். மீண்டும் பாஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் உள்ளது. கூட்டணியில் இருப்பது பற்றி தி.மு.க. அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு துணை நிற்போம்.

    ராஜபக்சேவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக் கூடாது. இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

    தமிழக அரசியலில் திரை கவர்ச்சி எடுபடாது. எடப்பாடி அணி- தினகரன் அணியால் வாக்கு வங்கி சிதறும். பாராளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும். அதற்கு முன்பு இடைத்தேர்தல் வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #ViduthalaiChiruthaigalkatchi #Thirumavalavan
    Next Story
    ×