search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் மூலம் ரோந்து
    X

    தூத்துக்குடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் மூலம் ரோந்து

    தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் மூலம் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாநகரில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கார் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரில் கண்காணிப்பு கேமராவை இயக்கும் வல்லுனர்களும் இருப்பார்கள். அவர்கள் ரோந்து செல்லும் போது கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொண்டே செல்வார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர்கள் தெரிந்தால் உடனடியாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வாகன ரோந்து தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு நடந்தது. தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கலந்து கொண்டு, கொடியசைத்து வாகன ரோந்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்து (தென்பாகம்), ரேனியஸ் ஜேசுபாதம் (மத்தியபாகம்), பார்த்தீபன் (வடபாகம்), சந்தனகுமார் (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், வேலாயுதம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறும்போது, தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பாதுகாப்பாக பொருட்கள் வாங்கி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட சிறப்பு ரோந்து வாகனம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், பொதுமக்கள் அதிகம் கூடும் 11 இடங்களில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதுபோன்று கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×