search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 2 தாசில்தார்கள் கைது
    X

    அருப்புக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 2 தாசில்தார்கள் கைது

    அருப்புக்கோட்டையில் பணம் வைத்து சூதாடியதாக 2 தாசில்தார்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Arrest

    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- பந்தல்குடி ரோட்டில் தனியார் கிளப் உள்ளது. இங்கு விருதுநகர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணம் வைத்து சூதாடுவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 34 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அங்கிருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் கைதானதில் 2 பேர் தாசில்தார்கள் என்பதும், ஒருவர் அரசு அதிகாரி என்பதும் தெரிய வந்தது.


    சூதாடியதாக கைதான தாசில்தார்களில் ஒருவர் பெயர் பாண்டிசங்கரராஜ். இவர் விருதுநகர் பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் சுரேந்திரன். மதுரையில் பணியாற்றி வருகிறார்.

    கைதான அரசு அதிகாரி முருகன் சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநராக பணியாற்று கிறார். இவர்கள் தவிர பஸ் டிரைவர்கள் ராஜசுந்தரம், ராஜாங்கம் உள்பட 34 பேரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சூதாட்டம் தொடர்பாக அதிகாரிகள் உள்பட 34 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Arrest

    Next Story
    ×