search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசுவை ஒழிக்காவிட்டால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை
    X

    டெங்கு கொசுவை ஒழிக்காவிட்டால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை

    டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சிவகங்கை:

    மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:- டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையினருடன் அனைத்து துறைகளும் இணைந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்வதுடன் வீடு, தெருக்கள், வார்டு, கிராமம் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய நகராட்சிப் பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகராட்சி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு மேற்கொள்வதுடன், காய்ச்சல் கண்காணிப்பு, கொசுப்புழு ஒழிப்பு, புகைமருந்து அடிக்கும் பணிகள், அபேட் மருந்து தெளிக்கும் பணி, குளோரின் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்திட வேண்டும். குடிநீர் குழாய் கசிவை உடனடியாக சரிசெய்தல் வேண்டும்.

    டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வைத்திருக்கும் வீடு, கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதித்தும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    ஆய்வு என்பது தினமும் நடைபெற வேண்டும். அதன் அறிக்கைகளை துறைத்தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.விஜயன் மதமடக்கி, துணை இயக்குனர் மரு.யசோதாமணி, உதவி இயக்குனர் விஜயநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×