search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல், மது கடத்தல்- தக்கோலம் ஏட்டு, ஆற்காடு போலீஸ்காரர் சஸ்பெண்டு
    X

    மணல், மது கடத்தல்- தக்கோலம் ஏட்டு, ஆற்காடு போலீஸ்காரர் சஸ்பெண்டு

    மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தக்கோலம் போலீஸ் ஏட்டு, புதுச்சேரியில் இருந்து மது கடத்திய ஆற்காடு போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள குசஸ்தலை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான லாரிகளில் மணல் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இதை வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் கண்காணித்து அவ்வப்போது தடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தக்கோலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு நாராயணசாமி மணல் கடத்தல்காரர்களோடு ரகசிய தொடர்பு வைத்துள்ளதாகவும் போலீசார் ஆய்வு குறித்து அவ்வப்போது கடத்தல்காரர்களுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் எஸ்.பி. பிரவேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஏட்டு நாராயணசாமியை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் இருந்து வேலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றி எஸ்.பி.பிரவேஷ்குமார் கடந்த 10 தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். மேலும் அவரின் செல்லிடப்பேசியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இதில் ஏட்டு நராயணசாமி, மணல் கடத்தல் காரர்களோடு பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு நாராயணசாமியை சஸ்பெண்டு செய்து வேலூர் எஸ்.பி.பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

    நாராயணசாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்தான் நெமிலி போலீஸ் நிலையத்தில் இருந்து தக்கோலத்துக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ்காரர் சுரேந்தர். இவர் நண்பர்களோடு சேர்ந்து புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்தார். விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள கோட்டகுப்பம் சோதனை சாவடியில் நடந்த சோதனையில் சிக்கி கொண்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தர் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சுரேந்தர் 4-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்.

    கைதான போலீஸ்காரர் சுரேந்தரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×