search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி, நாளை முதல் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி, நாளை முதல் சேலம் கோட்டத்தில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தில் நாளை முதல் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    சேலம்:

    நாடு முழுவதும் வருகிற 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் தங்கியிருக்கும் பலர் தங்கள் சொந்த ஊரில் இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக பஸ்கள் மற்றும் ரெயில்களில் முன்னதாகவே முன்பதிவு செய்து விட்டனர். மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

    சேலம் கோட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன.

    மேலும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நாளை முதல் சேலம் ஜவகர் மில் திடலில் தற்காலிகமாக பஸ் நிலையம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, அரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, மைசூரு, மேட்டூர், ராசிபுரம், எடப்பாடி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும். இதேபோல், ஜவகர்மில் திடல் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், ராமேசுவரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

    மேலும் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாசல் பின்புறம் உள்ள இடத்தில் இருந்து கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் கோட்டத்தில் இருந்து 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்ட நெரிசலை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும், வெளியூர்களுக்கு செல்லும் வகையில் 7, 8 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன‘ என்றனர்.
    Next Story
    ×