search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் தற்காலிக பஸ் நிலையங்கள் நாளை முதல் செயல்படும்
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் தற்காலிக பஸ் நிலையங்கள் நாளை முதல் செயல்படும்

    தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் நாளை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீஸ் சார்பில் சில வழிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    *தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக்கூடாது.

    *வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும். போக்கு வரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது.

    இதனை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 100-க்கும் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக எண்: 96262 73399-க்கும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் நாளை(வியாழக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களையும் இயக்க 2 தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் திருச்சி சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்து இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு, பின்னர் ஏற்றிக்கொண்டு மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.

    மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம்போல மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சுழற்சியாக டவுன் பஸ்கள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படா வண்ணம் போலீசாரின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×