search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தம்
    X

    ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தம்

    வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டிஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.

    கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 29-ந் தேதி வந்தடைந்தது. கண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 1300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்க உள்ளதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. தற்போது வினாடிக்கு 300 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

    கிருஷ்ணா குடிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    முதல் தவணையில் ஜனவரி முதல் மார்ச் வரை 1.256 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. தற்போது கடந்த மாதம் 29-ந் தேதியிலிருந்து நேற்று காலை 6 மணி வரை 1.599 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.54 அடியாக பதிவானது. 782 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு வெறும் 56 கனஅடி தண்ணீர் மட்டும்தான் வந்து கொண்டிருந்தது. பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் இணைப்பு கால் வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 18 கனஅடி தண்ணீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

    Next Story
    ×