search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்துவிட்டு அழைப்பு விடுப்பதா?- தினகரன் பேட்டி
    X

    18 எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்துவிட்டு அழைப்பு விடுப்பதா?- தினகரன் பேட்டி

    18 எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்துவிட்டு அழைப்பு விடுப்பதன் மூலம் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #edappadipalanisamy #opanneerselvam

    கரூர்:

    கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எனக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கு ஏன் சென்றிருக்கிறார். இதன் மூலம் முறைகேடு நடந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

    தன்னுடைய வி‌ஷயத்திற்காக உச்சநீதிமன்ற சென்ற முதல்வர், குட்கா விவகாரத்தில் ஏன் மேல் முறையீடுக்கு போகவில்லை. காரணம் மாட்டிக்கொண்டால் அமைச்சர் விஜயபாஸ்கர் தானே, தான் இல்லை என்ற நல்ல எண்ணம்தான். நான் மகான் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நான் மகான் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒன்றும் புனிதர் இல்லை.

    யாரால் முதல்வர் பதவி கிடைத்ததோ அவருக்கு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டே விலகத்தயார் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி மீண்டும் மாபெரும் வெற்றி பெறுவார். அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வோம். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபகரமாக உயர்த்தி உலக நாடுகளின் விருதுகளை பெற்றவர் போல், ஒரு லட்சம் பேரை கூட்டி திருமணம், பூப்புனித நீராட்டு விழாவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தியுள்ளார். அவர் யார் காலில் விழுந்து பதவிக்கு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    பதவி பறிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் எதுவும் வர வில்லை. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாகவும், சட்டப்படி எதையும் எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள். அதற்கு நீர் அடித்து நீர் விலகாது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூறியுள்ளனர். அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வின் 90 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை தாக்கி பேசுகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக டெல்லி போய் நிற்கிறார். ஆனால் யாரும் அவருக்கு பதில் கூட சொல்லவில்லை.


    தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததைவிட மக்களுக்கு அதிக ஏமாற்றம் தந்துள்ளது. அவர்கள் நல்ல தீர்ப்பு வரும், ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும்.

    மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. எனது குடும்பம் என்றால், எனது மனைவி, மகள், அதற்கு அடுத்த படி யாகத்தான் அண்ணன், தம்பி. கட்சிக்குள் தலையிட விடாததால் தான் திவாகரன், பாஸ்கரன் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளனர். கட்சி வேறு, உறவு வேறு. அ.தி. மு.க. ஆட்சி வீழ்வது உறுதி. துரோகங்கள் ஜெயித்ததாக வரலாறு இல்லை.

    மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். என்னைக்கண்டு முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குருபூஜையில் கலந்து கொண்ட தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் இடைத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர்.

    தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்களின் எண்ணம் எங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று எதிர்கட்சியை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளோம்.

    பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று முதல் வரும், துணை முதல் வரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் உள்ளது.

    நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வந்தாலும் ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி டெபாசிட் பெறாது.

    அ.தி.மு.க.வில் கூடு மட்டுமே உள்ளது.தொண்டர்கள் என்ற உயிரோட்டம் எங்களிடம் மட்டுமே உள்ளது. துரோகம் வீழ்ந்து தர்மம் வெல்லப்போகிறது.

    குக்கர் சின்னம் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.கே.நகரில் ரூ.200 கோடி செலவு செய்தும் தோல்வி அடைந்தவர்கள் எடப்பாடி அணியினர். நிதானமாக யோசித்து பேசுபவன் நான்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #admk #edappadipalanisamy #opanneerselvam

    Next Story
    ×