search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்
    X

    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்று தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜ‌ன் கூறினார். #MinisterPandiarajan #ADMK
    நெல்லை:

    தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜ‌ன் இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்துக்கு வந்தார். அருங்காட்சியகத்தை ஆய்வு செய்த அவர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூ.2.8 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. புதிதாக கேலரி, கலையரங்கம் கட்டப்பட உள்ளது. தரங்கம்பாடி அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.4.8 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.

    புதுக்கோட்டை, திருச்சி அருங்காட்சியகங்களும் தரம் உயர்த்தப்பட உள்ளன. திருவண்ணாமலை, தேனி ஆகிய இடங்களில் புதிய அருங்காட்சியகம் அமைக்க அரசு ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வுகள் நடந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை வைப்பதற்கு அங்கேயே அகழ் வைப்பகம் அமைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    அகழ் வைப்பகம் அமையும் இடங்களில் மற்ற‌ கட்டிடங்கள் இருக்கக்கூடாது. அதை கருத்தில் கொண்டு அகழ் வைப்பகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க மத்திய அரசு ரூ.1 லட்சம் ஒதுக்கியுள்ளது.

    மதுரையில் ரூ.56 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பழந்தமிழர் கண்காட்சி, ஐந்திணை பூங்கா, தமிழ்தாய் சிலையுடன் அமைக்கப்பட இருக்கிறது. அரியலூரில் திறந்தவெளி மியூசியம் அமைய உள்ளது. அருங்காட்சியகங்களில் மாணவர்களின் கலைதிறன்களை வளர்க்க பல்வேறு பயிற்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களை ஆண்டுக்கு 10 லட்சம்பேர் மட்டுமே பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதை 20 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவியர் ஆண்டுக்கு ஒருமுறை அருங்காட்சியகத்தை பார்வையிட அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் பார்வையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும். சென்னை அருங்காட்சி யகத்தில் 6 விதமான வரலாற்று கண்காட்சிகள் அமைக்கப்படும்.



    அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்துக்கு திரும்பி வரவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ள‌ன‌ர். எனவே கட்சியை விட்டு சென்ற‌வர்கள் மீண்டும் வரவேண்டும்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஏராளமானோர் சேர்ந்து வருகிறார்கள். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். ஜெயலலிதா கூறியதுபோல் நூறாண்டுகாலம் இந்த ஆட்சி நீடிக்கும்.

    இப்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். கடந்தமுறை உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் 1 லட்சம் பேர் பதவிக்கு வந்தார்கள். வரும் தேர்தலில் இன்னும் அதிகமானோர் பதவிக்கு வருவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.   #MinisterPandiarajan #ADMK
    Next Story
    ×