search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் வீதியெங்கும் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
    X

    உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் வீதியெங்கும் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்

    சென்னையில் உள்ள தெருக்களில் குப்பைகள் அள்ளும் பணி சரிவர நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததாலும், மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் இல்லாததாலும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. #TNLocalBodyElection


    சென்னை மாநகராட்சி மாமன்றம், மேயர், நிலைக்குழுக்கள், வார்டு குழுக்கள், ஆணையர் உள்ளடக்கிய அமைப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2016-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றது. 2 ஆண்டுகள் ஆகியும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

    சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களாகவும், 200 வார்டுகளாகவும் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள மாமன்ற கூடம், மாநகராட்சி வார்டு குழு அலுவலகங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ‘ரிப்பன்’ மாளிகை ‘களை’ இழந்து காணப்படுகிறது.

    மேயர், கவுன்சிலர்கள் என பரபரப்பாக செயல்பட்டு வந்த மாநகராட்சி அலுவலகம் தற்போது வெறிச்சோடி உள்ளது. பொது மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. கோரிக்கைகள், குறைகள் குறித்து யாரிடம் மனுக்கள் அளிப்பது என தெரியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.

    மாநகராட்சியில் உள்ள அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆர்வமின்றி செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் குறைகள் மீது அக்கறை செலுத்துவது இல்லை. மெத்தனப் போக்கை ஊழியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

    சமீபகாலமாக சென்னையில் உள்ள தெருக்களில் குப்பைகள் அள்ளும் பணி சரிவர நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததாலும், மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் இல்லாததாலும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் தினமும் 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் இந்த குப்பைகள் கொட்டப்படுகின்றன.

    கடந்த சில தினங்களாக சென்னையில் வீதியெங்கம் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், ஜெ.ஜெ.நகர் உள்பட பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி உள்ளன.

    இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. குப்பைகளால் அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலை காணப்படுகிறது.

    மேலும் சென்னை மாநகராட்சி அனைத்து வார்டு தெருக்களிலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தெருக்களை துப்புரவு தொழிலாளிகள் சரிவர பெருக்குவது இல்லை. சாலைகள், தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது.

    கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. தினமும் கொசு மருந்துகள் அடிக்கப்படாததால் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் கொசுக்கள் படையெடுத்து வருகின்றன. கொசுக்கடியால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வீதியெங்கும் சாக்கடை நீர் ஓடுகிறது. சுகாதார சீர்கேட்டால் தினமும் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    சென்னையில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து சாலைகளும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மேடு, பள்ளங்களில் சிக்கி தடுமாறி வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இதனால் அடிக்கடி பொதுமக்களின் வாகனங்கள் பழுது ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக சாலைகள் பழுது பார்க்கப்படாததாலும், புதிய சாலைகள் சரிவர போடப்படாததாலும் சென்னை முழுவதும் சாலைகள் அலங்கோலமாக காணப்படுகிறது. சாலைகளில் புழுதி மண் நிறைந்து காணப்படுகிறது. தூசி, புழுதி மணல் காரணமாக சாலையில் இரு சக்கர வாகனங்கள் ஓட்ட மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    மாநகராட்சி பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்பட வில்லை. பெரம்பூர், எழும்பூர் உள்பட பல பகுதிகளில் உள்ள பூங்காக்கள் பராமரிப் பில்லாமல் காணப்படுகிறது. பூங்காக்களில் உள்ள சிறுவர்கள் பொழுதுபோக்கும் விளையாட்டு சாதனங்கள் உடைந்து அலங்கோலமாக கிடக்கிறது. பூங்காக்களில் பொதுமக்கள், சிறுவர்கள் வருகை குறைந்துள்ளது. ‘இசைநீரூற்றுகள்’ தண்ணீர் இல்லாமல் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. பூங்காக்களில் மது அருந்துதல், சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி பூங்கா பராமரிப்பு ஊழியர்கள் பணிக்கு சரிவர வராமல் பூங்காக்களை சீரழித்து வருகிறார்கள்.

    சென்னையில் ஆங்காங்கே மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, புதிய வடிகால்வாய்கள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மழைநீர் வடிகால்வாய் பணிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மழைநீர்கால்வாய்க்காக ஆங்காங்கே சாலையோரம் பள்ளம், தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகளின் ஒப்பந்த தாரர்கள் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

    எனவே மழைநீர் வடி கால்வாய் பணிகளை விரைவாக செய்து முடித்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை இன்னும் ஒருசில நாட்களில் தொடங்க இருக்கிறது. மழைகாலங்களில் சாலைகளில் தேங்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

    மழைத்தண்ணீர் சாலைகளில் தேங்காமல் இருக்கவும் உடனடியாக மழைநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க தேவையான முன்னேற் பாட்டில் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட வேண்டும். சாலைகளில் சரிந்து விழும் மரங்களை உடனுக்குடன் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாநகராட்சி பணிகள் விரைவாக நடைபெற வேண்டுமானால் உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர்கள், மாநகராட்சிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். #TNLocalBodyElection

    Next Story
    ×