search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி
    X

    குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி

    குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலியானதையடுத்து பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே பருத்திவிளையைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி சுகன்யா (வயது 30). 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இவர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். முதலில் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்தபோது சுகன்யாவுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    அதன்பின் மேல்சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா இன்று காலை இறந்தார்.

    நாகர்கோவில் ராமன்புதூர் சற்குணவீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை தெரசா ஏற்கனவே பன்றிக்காய்ச்சல் தாக்கி பலியாகி இருந்தார். தற்போது சுகன்யா இறந்துள்ளதால் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் ஒரு குழந்தையும், ஆண், பெண் உள்பட 8 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. நேற்று மேலும் சிலர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர்.

    நேற்றிரவு மண்டைக்காடு புதூரை சேர்ந்த 2 வயது பெண்குழந்தை, தென்தாமரை குளம் புவியூர் பகுதியை சேர்ந்த 5 வயது ஆண்குழந்தை, இடலாக்குடியை சேர்ந்த 12 வயது சிறுமி, கிருஷ்ணன்கோவில், உடையார்விளையை சேர்ந்த இளம்பெண்கள் என மேலும் 5 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    அவர்கள் பரிசோதனைக்கு பிறகு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் மொத்தம் 13 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து உள்ளது. தினமும் வெளிநோயாளிகள் பிரிவில் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க ஆஸ்பத்திரி பார்மசி முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வெளிநோயாளிகள் பிரிவில் மருந்து வழங்க நேற்று முதல் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

    குமரி மாவட்டம் முழுவதும் பன்றி காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இளம் வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அவர்களில் பலரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்ந்த வண்ணம் உள்ளனர். பல ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து சுகாதார துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். #Swineflu


    Next Story
    ×