search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மம் வெல்லும் என்பது நீதிமன்றம் மூலம் உண்மையாகி உள்ளது- முதலமைச்சர் பேச்சு
    X

    தர்மம் வெல்லும் என்பது நீதிமன்றம் மூலம் உண்மையாகி உள்ளது- முதலமைச்சர் பேச்சு

    தர்மம் வெல்லும் என்பது நீதிமன்றம் மூலம் உண்மையாகி உள்ளதாக கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami #18MLAsCaseVerdict
    கோவை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

    ஈச்சனாரி செல்லும் வழியில் சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் எண்ணங்கள் இன்றைக்கு தவிடு பொடியாகி உள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு சில எட்டப்பர்கள் எதிரியோடு சேர்ந்து இந்த இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அதை மக்களின் துணையோடு ஜெயலலிதா தவிடுபொடியாக்கினார்.

    ரத்தத்தை வியர்வையாக சிந்தி, தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து மீண்டும் தமிழகத்திலே எம்.ஜி.ஆர். ஆட்சியை உருவாக்கினார். எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க ஜெயலலிதா தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றினார்.

    இந்த ஆட்சி கலைந்து விடும் என்று சிலர் கனவு கண்டனர். ஆனால், இறைவன் அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. சில துரோகிகள், எதிரிகளோடு இணைந்து கொண்டு கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் முயன்றனர். ஆனால் அவர்களின் சதி முறியடிக்கப்பட்டு விட்டது.

    நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது தான் நடக்கும். எப்போதும் தர்மம், உண்மையே வெல்லும் என்பது நீதிமன்றம் மூலம் உண்மையாகி உள்ளது. துரோகத்திற்கு இறைவன் தக்க தண்டனை வழங்கி உள்ளார். ஆட்சியைக் கலைக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று சதிகாரர்களோடு கூட்டு சேர்ந்து சதி செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்துள்ளது.

    அனைத்து தரப்பின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக பணியாற்றி வருகிறேன். கழகத்தில் நான் வகிக்காத பதவிகளே கிடையாது. தொண்டன் நடத்தும் ஆட்சி இது. மக்களின் தேவை என்ன என்று எனக்கு தெரியும். மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறோம் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.

    இந்த ஆட்சி பதவிஏற்ற போது 10 நாள் முதல்வராக தாக்கு பிடிப்பாரா? என்று கேட்டார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஆட்சியை கலைக்க வேண்டும் என சொல்லி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு நாற்காலி மீது தான் ஆசை. மக்களை பற்றிய எண்ணம் இல்லை. நான் உழைத்து இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கொல்லை பக்கமாக வந்து ஆட்சியை பிடிக்கவில்லை.

    இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை நாம் கட்டிக்காப்போம். மக்களுக்கு நன்மை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami #18MLAsCaseVerdict
    Next Story
    ×