search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை
    X

    நாமக்கல் அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா சின்னப்பநாயக்கன் பாளையம், மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். விசைத்தறி அதிபர். இவரது மகன் வேலழகன்(வயது 27). பி.காம் பட்டதாரி.

    நேற்று இரவு இவரும், இவரது நண்பர்கள் விவேக், விக்னேஸ்வரன், பிரசாந்த், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 5 பேரும் குமாரபாளையம், சேலம் மெயின் ரோடு பங்களா அருகே இருக்கும் ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட சென்றனர். அப்போது அந்த ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன், அவரது மகன் செந்தமிழ்வேலன் ஆகியோர் ஓட்டலை மூடிக்கொண்டிருந்தனர். இந்த ஓட்டலுக்கு சென்ற வேலழகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் தங்களுக்கு புரோட்டா, தோசை, ஆம்லேட் வேண்டும். உடனே தயார் செய்து கொடுங்கள் என்று கேட்டனர். அதற்கு லட்சுமணன் கடையை மூடி விட்டேன். அடுப்பையும் அணைத்து விட்டேன். இனிமேல் டிபன் செய்து கொடுக்க முடியாது. வேறு ஓட்டலுக்கு செல்லுங்கள் என்று கூறினார்.

    இந்த நிலையில் பார்சலுக்கு ஒருவர் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்தார். இதனால் டிபன் பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நபர் வந்து கேட்டதும் லட்சுமணன் பார்சல்களை எடுத்துக்கொடுத்தார். இதை பார்த்ததும் 5 பேரும் இப்போது வந்தவருக்கு பார்சல் கொடுக்கிறாய். எங்களுக்கு உணவு இல்லை என்று சொல்கிறாய்? என்ன நியாயம் என்று கேட்டனர்.

    இதனால் லட்சுமணனுக்கும், அவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வேலழகன் கற்களை எடுத்து லட்சுமணனை தாக்க முயன்றார். அவரை நண்பர்கள் பிடித்து விலக்கி விட்டனர். அப்போது வேலழகன் விறகு கட்டையை எடுத்து வந்து லட்சுமணனை அடிக்க பாய்ந்தார்.

    லட்சுமணனும், அவரது மகன் செந்தமிழ்வேலனும் சேர்ந்து வேலழகனை பிடித்தனர். பின்னர் அந்த விறகு கட்டையை லட்சுமணன் வாங்கி திரும்ப வேலழகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேலழகன் பரிதாபமாக இறந்தார். குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன் மற்றும் அவரது மகன் செந்தமிழ்வேல் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட வேலழகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு பல்வேறு இடங்களில் வரண் பார்த்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டார். விசைத்தறி அதிபர் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குமாரபாளையத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×