search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் சி.பி.ஐ. அலுவலகம் முன்பு காங்கிரஸ் போராட்டத்தில் கோஷ்டி பூசல்
    X

    சென்னையில் சி.பி.ஐ. அலுவலகம் முன்பு காங்கிரஸ் போராட்டத்தில் கோஷ்டி பூசல்

    சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே நடந்த காங்கிரஸ் கண்டன போராட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #congressprotest

    சென்னை:

    சி.பி.ஐ. உயர் அதிகாரிகளான அலோக்வர்மா, ராஜேஷ் அஸ்தனா ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மத்திய அரசு அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதற்கிடையில் சி.பி.ஐ. அதிகாரியான அலோக் வர்மா, ரபேல் விமான ஊழல் தொடர்பான ஆதாரங்ளை திரட்டியதால்தான் அவரை மத்திய அரசு பழி வாங்கியதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.

    மத்திய அரசின் நடவடிக் கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல்காந்தி அறிவித்தார்.

    அதன்படி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு ஜனநாயக நெறிமுறைகளை குறிதோண்டி புதைத்து வருகிறது. சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் நியமனத்தை பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க முடியும்.

    ஆனால் ரபேல் போர் விமான ஊழல் வழக்கை மறைப்பதற்காக பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழகத்தில் இப்போது 50 லட்சம் வாக்காளர்களுக்கு பிரதிநிதிகள் இல்லை. மக்கள் 20 தொகுதிகளிலும் தேர்தலையே எதிர்பார்க்கிறார்கள்.

    இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது. மத்தியில் நடைபெறும் காவி ஆட்சியையும் மாநிலத்தில் நடைபெறும் ஆவி ஆட்சியையும் மக்கள் தூக்கி ஏறிவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் சீரஞ்சீவி, தாமோதரன், அஸ்லம் பாட்சா, கஜநாதன், பி.ஏ. நவீன், தணிகாசலம், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், நிர்வாகிகள் நாச்சிகுளம் சரவணன், டாக்டர் பாண்டியராஜ், தி.நகர் விக்னேஷ்வரன், ரஞ்சன்குமார், சீதாபதி, நவாஸ், ஜி.கே.தாஸ், பிராங் ளின் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சாஸ்திரி பவன் எதிரே உள்ள ஆண்டர்சன் சாலை முகப்பில் காலை 10 மணியில் இருந்தே தொண்டர்கள் திரள தொடங்கினார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லகுமார், எம்.எல். ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், திருநாவுக்கரசர் வருகைக்காக காத்திருந்தனர். அவரை தொண்டர்கள் திரண்டு நின்று பகுதிக்கு மெயின் ரோடு வழியாக வரும்படி தகவலும் தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அவரை பின்புறமாக அழைத்து வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது முன் பகுதியில் திரண்டு நின்ற மூத்த நிர்வாகிகள் அந்த பகுதிக்கு வரவில்லை. திருநாவுக்கரசர் நேரடியாக ஒலிபெருக்கியில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை அழைத்தார். ஆனால் யாரும் அங்கு செல்லவில்லை.

    தொடர்ந்து திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றி விட்டு போராட்டத்தை முடித்தனர். மற்றொரு இடத்தில் கே.ஆர்.ராமசாமி உள்பட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிட செல்வோம், கைது செய்தால் அதற்கும் தயார் ஆவோம் என்றபடி திருநாவுக்கரசர் மெயின் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை திருநாவுக்கரசர் அழைத்து, “ஏன் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வரவில்லை. நீங்கள் தனி அரசியல் நடத்துகிறீர்களா? என்று ஆவேசமாக கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதை பார்த்ததும் கே.ஆர்.ராமசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கைது ஆவதற்கு விருப்பம் இல்லாமல் அங்கிருந்து தள்ளி சென்று விட்டனர்.

    இதனால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களும், கைது ஆகாமல் சென்றனர். எல்லோரும் ஆங்காங்கே தனித்தனியாக நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை கைது செய்வதா? வேண்டாமா? என்று தெரியாமல் போலீசாரும் தவித்தனர். பின்னர் ஒரு வழியாக காங்கிரசார் கலைந்து சென்றனர். #congressprotest

    Next Story
    ×