search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பாதிப்பு
    X

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பாதிப்பு

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் யாஸ்மின் தெரிவித்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நேற்று சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின், சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், சென்னையை சேர்ந்த மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் கீதாலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள், பெண்கள், மகப்பேறு பிரிவு, சித்தா, ஹோமியோ, தொழு நோயாளிகள் பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ள பிரிவுக்கு சென்று கொசுகள் கடிக்காத வகையில் இருக்க கொசுவலைகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளதா?, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

    மருத்துவமனை வளாகத்தில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி உள்ளதா?, அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளது, டெங்கு நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் மருத்துவமனையில் இருக்கிறதா? என்று பார்வையிட்டனர்.

    அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது ரத்தத்தில் அணுக்கள் எந்த அளவு உள்ளது. ரத்த அணுக்கள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக தேவையான சிகிச்சைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

    காய்ச்சல் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் ‘எலைசா’ பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி நோயை கட்டுப்படுத்த வேண்டும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் இணை இயக்குனர் யாஸ்மின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல், விஷ காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதே நிலை மீண்டும் தமிழகத்தில் வந்துவிடாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர் கலெக்டரின் உத்தரவுபடி போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில், வாலாஜா அரசு மருத்துவமனையில் இப்ராஹிம் (வயது 20) என்பவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவரை தனிவார்டில் வைத்து 24 மணி நேரம் கண்காணிப்பில் கொசுவலையுடன் கூடிய பாதுகாப்பில் வைத்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் இருப்பது அறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து சுற்றுபுற சுகாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்காக சுகாதார அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது பொதுமக்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அரக்கோணம் மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா, டாக்டர் சங்கர், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×