search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் விடுதியில் இருந்து உமா மகேஸ்வரியின் கார் வெளியே செல்வதை படத்தில் காணலாம்.
    X
    குற்றாலம் விடுதியில் இருந்து உமா மகேஸ்வரியின் கார் வெளியே செல்வதை படத்தில் காணலாம்.

    குற்றாலம் சொகுசு விடுதியில் இருந்து தகுதி நீக்க எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் சொகுசு விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். #18MLAsCaseVerdict
    தென்காசி:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது. முன்னதாக தீர்ப்பு குறித்த விபரம் வெளியாகும் முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்கியிருக்குமாறு டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில், தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கதிர் காமு (பெரியகுளம்), சுப்பிரமணியன் (சாத் தூர்), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), முத்தையா (பரமக்குடி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி) ஆகிய 8 பேரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் கடந்த 22-ந்தேதி பழைய குற்றாலம் வந்து, இசக்கி ரிசார்ட்டில் தங்கினர்.


    நேற்று முன்தினம் அவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவையொட்டி புனித நீராடினர். பின்னர் அங்கு நடந்த யாகத்தில் கலந்து கொண்டு மாலையில் குற்றாலத்துக்கு வந்தனர். இரவில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதிக்கு சென்று தங்கினார்கள்.

    இதற்கிடையே, இடம் மாறிய சொகுசு விடுதிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), ஏழுமலை (பூந்தமல்லி) ஆகியோர் வந்தனர்.

    இந்த நிலையில் இன்று 4-வது நாளாக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமா மகேஸ்வரி இன்று காலை அங்கு வந்தார்.

    இதனிடையே டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பானது. கட்சி நிர்வாகிகள் அங்கு வரத்தொடங்கினர். மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா அந்த விடுதிக்கு சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.

    இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். மேலும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஏற்கனவே மருது பாண்டியர் நினைவு நாளையொட்டி, சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன், ஜான் கென்னடி ஆகிய இருவரும் நேற்றே மதுரை புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #18MLAsCaseVerdict
    Next Story
    ×