search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதனமுறையில் பணம் திருடிய மேலும் ஒரு வாலிபர் கைது
    X

    அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதனமுறையில் பணம் திருடிய மேலும் ஒரு வாலிபர் கைது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் பக்தர் போல வந்த நபர் ஒருவர் அம்மன் சன்னதி கொடிமரம் முன்பு இருந்த உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை அட்டையில் பசை தடவி நூதன முறையில் திருடினார்.

    அவரை கோவில் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 770-ஐ போலீசார் பறிமுதல் செய்து கனகராஜை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இதேபோல நேற்றும் அதே உண்டியலில் ஒரு வாலிபர் பணம் திருடியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.

    அதன் விவரம் வருமாறு:-

    அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தின் கீழ் உள்ள உண்டியல் அருகே நேற்று காலை அடிக்கடி ஒரு நபர் வந்து காணிக்கை போடுவது போல் உண்டியல் உள்ளே இருந்து பணத்தை எடுத்தார். இதைப்பார்த்த கோவில் ஊழியர்கள் சந்தேகமடைந்து அவரை பிடித்து இணை ஆணையர் ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர். அவர் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பழனியப்பா காலனியை சேர்ந்த தினேஷ் (31) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தினேஷ் கடந்த சில நாட்களாக கோவிலுக்கு பக்தர் போல வந்து அம்மன் சன்னதி கொடிமர உண்டியல் ஓட்டையில் ஒரு பிளாஸ்டிக் அட்டையை மடித்து உள்ளே வைத்து விடுவார். உண்டியலுக்குள் பக்தர்கள் போடும் காணிக்கை உண்டியல் உள்ளே விழாமல் அந்த அட்டையில் சிக்கி இருக்கும். சிறிது நேரம் கழித்து தினேஷ் சென்று உண்டியலில் பணம் போடுவது போன்று அட்டையில் சிக்கி இருக்கும் பணத்தை எடுத்து விடுவார். இவர் அடிக்கடி வந்துள்ளார்.

    இவை அனைத்தும் கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இவர் உண்டியலில் திருடிய ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் 3 நாட்களாக ஒரே சட்டை அணிந்து வந்துள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கோவில் ஊழியர் முரளி திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

    கோவிலில் கடந்த சில நாட்களாக பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    புகழ்பெற்ற அண்ணாமலை கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் சிக்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×