search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்படும்
    X

    ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்படும்

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. #Jayalalithaa #ADMK
    சென்னை:

    ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி உயிர் இழந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 24.2.2018 அன்று ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. 7 அடி உயரம் கொண்ட இந்த சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    சிலை திறக்கப்பட்டது முதல், அந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளி வந்தன. மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்தனர். இது குறித்து அந்த சிலையை வடிவமைத்த ஆந்திராவை சேர்ந்த பி.எஸ்.வி.பிரசாத் என்ற சிற்பி கருத்து கூறும்போது, தனக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.



    விமர்சனங்களை தொடர்ந்து, அந்த சிலையை அகற்றிவிட்டு, புதிய சிலையை அமைக்க அ.தி.மு.க. தலைமைக் கழகம் முடிவு செய்தது. அதன்படி, புதிய சிலையை வடிவமைக்கும் பொறுப்பை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் அ.தி.மு.க. தலைமைக் கழகம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை நேற்று பிற்பகலில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    சிலையை வடிவமைத்த சிற்பி ராஜ்குமார் கூறியதாவது:-

    இந்த புதிய சிலை 8 அடி உயரம், 800 கிலோ எடையில் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது.

    சிலை வடிவமைக்க 4 மாதங்கள் ஆனது. என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர், அப்துல்கலாம் போன்றவர்களின் சிலைகள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளை செய்துள்ளேன். பழைய சிலை அகற்றப்பட்டு பீடம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படும். அதன்பிறகு முதல்-அமைச்சர் கூறும் நாளில் புதிய சிலை நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதாவின் புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்துவிட்டனர் என்றும், விரைவில் நல்ல நாள் பார்த்து ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்படும் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. 
    Next Story
    ×