search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
    X

    கடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

    கடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் பெருநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 100 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வார்டுகள் தோறும் உள்ள அனைத்து வீடு மற்றும் வணிகவளாகங்களுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி சுகாதார ஆய்வாளர்கள் பாக்கியநாதன், சிவா, மேற்பார்வையாளர்கள் தண்டபாணி, பக்கிரிராஜா, தூய்மைபாரத இயக்க பரப்புரையாளர் ஆனந்தன் மற்றும் களப்பணியாளர்கள் நேற்று திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவிநாயுடு தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு சில வீடுகளின் தோட்டம் மற்றும் உபயோகமற்ற கழிப்பறைகளில் உள்ள பாத்திரம் மற்றும் தேங்காய் மட்டைகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் வளர்ந்துள்ளதா? என பார்வையிட்டனர். அப்போது கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் பேரல்கள், குடங்களில் தண்ணீரை சேமித்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்களிடம், சேமித்த தண்ணீரை உடனே அகற்றவதோடு, வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை செய்தனர்.

    இது குறித்து தூய்மைபாரத இயக்க பரப்புரையாளர் ஆனந்தன் கூறும்போது, தூய்மைபாரத இயக்கத்தின் மூலம் கடலூர் பெருநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி, பொது இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 100 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பணியாளர்கள் வீடு வீடாக சென்று பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    Next Story
    ×