search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 13 பேருக்கு பன்றி காய்ச்சல் - கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம்
    X

    குமரி மாவட்டத்தில் 13 பேருக்கு பன்றி காய்ச்சல் - கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம்

    குமரி மாவட்டத்தில் 13 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த காய்ச்சலை கண்காணித்து கட்டுப்படுத்த சிறப்பு சுகாதாரத்துறை அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்தவர் திரேஷா (வயது 60). ஓய்வு பெற்ற பேராசிரியையான இவர் பன்றி காய்ச்சலுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் மற்றும் ஒரு வயது குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண் மட்டும் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பள்ளம் பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றி காய்ச்சல் வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் மாவட்டம் முழுவதும் மேலும் 11 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மொத்தத்தில் 13 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் நலமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதினாலும் தமிழக அரசு சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் சரவணன் என்பவரை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நியமித்துள்ளது. அவர் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு அதிகாரி சரவணன் கொசு ஒழிப்புக்கான மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நிருபர்களிடம் கூறியபோது, “குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமாக இருக்கிறார்கள். பன்றி காய்ச்சலை உடனே கண்டுபிடித்துவிட்டால் அதற்கான சிகிச்சைகள் அளித்து குணப்படுத்தி விடலாம். எனவே காய்ச்சல் வந்தால் அஜாக்கிரதையாக இருந்துவிடாமல் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் காய்ச்சல் காரணமாக ஏதேனும் மாணவ-மாணவிகள் விடுப்பு எடுக்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகிறோம். பன்றிக்காய்ச்சல் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்“ என்றார்
    Next Story
    ×