search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 82 நடமாடும் மருத்துவ குழு - அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 82 நடமாடும் மருத்துவ குழு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #DengueFever
    சென்னை:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், கட்டுமான பணிகள் சங்கத்தினர், உணவக, திருமண மண்டப, திரையரங்கு உரிமையாளர்கள், வணிகர்கள், தனியார் பள்ளி, கல்லூரி தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துரைத்தார். கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும், ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை முழுமையாக தர வேண்டும் என வலியுறுத்தினார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கவும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.



    இந்த குழுக்கள் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிக்கு சென்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். டெங்கு மற்றும் அனைத்து வகையான காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவி, ரத்த கூறுகள், ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பு உள்ளன.

    டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினம் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

    பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு செயல்பட்டு வருகிறது.

    பொது இடங்களுக்கு சென்று வருபவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெட்டேரி அருகே ஒரு தனியார் மண்டபத்தில் மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மழை வெள்ள பாதுகாப்பு கண்காணிப்பாளர் டாக்டர் சந்தோஷ்பாபு கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.

    வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #MinisterVijayabaskar #DengueFever

    Next Story
    ×