search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு?
    X

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு?

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும், நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 4 அணிகள் உருவானது.

    அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து அ.தி.மு.க. கட்சி- ஆட்சி இரண்டையும் கைப்பற்றினார்கள்.

    சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரனுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் தமிழக கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அவருக்கு பதில் வேறு ஒருவரை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சிபாரிசின் பேரில் சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    சபாநாயகர் நடவடிக்கையை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

    நீதிபதி சத்திய நாராயணா

    இதையடுத்து 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்திய நாராயணா இந்த வழக்கை விசாரணை நடத்தினார். வக்கீல்கள் வாதம் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும், நாளை மறுநாள் (25-ந்தேதி) இதில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வருமா? அல்லது செல்லாது என்று தீர்ப்பு வருமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    செல்லாது என்று தீர்ப்பு கூறினால் 18 பேருக்கும் எம்.எல்.ஏ. பதவி திரும்ப கிடைத்து விடும். இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.

    இதனால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. #18MLAsCase #MLAsDisqualificationCase
    Next Story
    ×