search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது: திருநாவுக்கரசர்
    X

    தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது: திருநாவுக்கரசர்

    தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #ADMK
    தென்காசி :

    நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர்கள் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட கட்சி பணிகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டி தேர்தல் நடத்திருக்க வேண்டும். இந்த 2 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுகிறது. அதனால் வராத மழையையும், புயலையும் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.



    உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான். கோர்ட்டு வலியுறுத்தியும் கூட தேர்தலை தள்ளிவைத்து கொண்டே இருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தீர்ப்பு வந்த பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சி குறித்து நான் சொல்லாத கருத்துக்களை வைத்து சில ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது, அது தவறு. தி.மு.க.வில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்பது கமலின் கருத்து ஆகும்.

    சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை பின்பற்ற வேண்டும் என்ற முறையில் அங்குள்ள அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. இந்த தீர்ப்பால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் கோவில் நிர்வாகம், ஆன்மிகவாதிகள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்து பரிகாரம் தேட வேண்டும். அதைவிட்டு தீர்ப்பு வழங்கிய பிறகு பாரதீய ஜனதா மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயல்பட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #ADMK
    Next Story
    ×