search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை தொடர்ந்து உயரும் - வியாபாரிகள் தகவல்
    X

    தங்கம் விலை தொடர்ந்து உயரும் - வியாபாரிகள் தகவல்

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். #Goldprices
    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 900-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தொட்டது. அதனைத்தொடர்ந்தும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.46 உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 37-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 296-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளியை பொறுத்தவரையில் நேற்று கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 41 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. கடந்த 2 வாரத்தில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்துக்கு எதிராக 40 டாலர் அதிகரித்து உள்ளது.

    இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை கடந்து செல்லும்.

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Goldprices
    Next Story
    ×