search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே பஸ்கள் மோதி விபத்து - பெண் பலி - 15 பேர் படுகாயம்
    X

    ஜெயங்கொண்டம் அருகே பஸ்கள் மோதி விபத்து - பெண் பலி - 15 பேர் படுகாயம்

    ஜெயங்கொண்டம் அருகே தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை வடலூரை சேர்ந்த ஜோதிவேல் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். கச்சிராபாளையத்தை சேர்ந்த சரவணன்(44) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பஸ் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ், அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் ஒருபுறமும், தனியார் பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது.



    இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்தவர்கள் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்தனர். இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மனைவி காதர்பீவி (34) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.

    மேலும் சாகுல் ஹமீது, அவரது மகள் ஆப்ரின் பாத்திமா(12) மற்றும் அவர்களுடன் பயணம் செய்த உறவினர்களான நஸ்ரின்பானு(28) அவரது குழந்தை ராஹிபா (2) மற்றும் ஷேக் பாதுஷா(45) அவரது மனைவி ஹசீனா பேகம் (38) ஆகியோரும், ராஜமன்னார்குடியைச் சேர்ந்த பொதியப்பன் மனைவி ஜெயலட்சுமி (38) சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சங்கரமூர்த்தி (48) திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (38), தா.பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி (40) காட்டுமன்னார்குடி சம்பத் மகள் ராஜபிரியா (24), அவரது தங்கை அறிவுக்கரசி (19), அரசு பஸ் டிரைவர் ஜோதிவேல், கண்டக்டர் சரவணன், தனியார் பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ராமமூர்த்தி (38) ஆகிய 15 பேரும் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த காதர்பீவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மீட்பு பணி முடிந்ததும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 15 பேரையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு, அவர்களிடம் நலம் விசாரித்தனர். விபத்தில் மனைவியை பறிகொடுத்த சாகுல் ஹமீதுக்கும் அவர்கள் ஆறுதல் கூறி விட்டு, விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து படுகாயமடைந்த 15 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×