search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ரெயிலை நிறுத்தி சோதனை
    X

    சென்னை ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ரெயிலை நிறுத்தி சோதனை

    சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரெயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதால், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #BombThreat #ChennaiRailwayStation
    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்ணுக்கு நேற்று இரவு 12 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் இந்த நாச செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னை மாநகர கட்டுப்பாட்டு போலீசார் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூரை நோக்கி வந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    சென்னை ரெயில்வே போலீசார் ஜோத்பூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்ததால் வழியில் நிறுத்தி சோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்தனர்.



    அதன்படி நள்ளிரவில் ஜோத்பூர் ரெயிலில் வெடி குண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. என தெரிய வந்தது. இதையடுத்து அந்த ரெயில் இன்று காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்தடைந்தது.

    ரெயிலில் சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பயணிகள் இறங்கியதும் போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி வெடிகுண்டு சோதனை நடத்தினர்.மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் வழியாக சோதனை நடத்தப்பட்டது.

    தீவிர சோதனைக்கு பிறகு அது ‘வெறும் புரளி’ என தெரியவந்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் பொருட்களும் தீவிர சோதனை நடத்தப்பட்டன.

    வடமாநிலத்தில் இருந்து வந்த பயணிகளை அழைப்பதற்காக அவர்களது உறவினர்களும் நிலையத்திற்கு வந்திருந்தனர். ரெயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. #BombThreat #ChennaiRailwayStation
    Next Story
    ×