search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததாக போலி ஆணை கொடுத்து ரூ.23 லட்சம் மோசடி - 2 பேர் கைது
    X

    குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததாக போலி ஆணை கொடுத்து ரூ.23 லட்சம் மோசடி - 2 பேர் கைது

    குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ததாக போலி ஆணை கொடுத்து ரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன்லைன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது41).

    இவர் தனக்கு குடிசை மாற்று வாரியத்தில் அதிகாரிகளை தெரியும். வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்க முடியும் என்று கோடம்பாக்கம், கிராமத்தெருவைச் சேர்ந்த ரேகாவிடம் கூறினார்.

    இதனை நம்பிய ரேகா உள்ளிட்ட 59 பேர் தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சத்தை லட்சுமியிடம் கொடுத்து குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தரும்படி கூறினர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் லட்சுமி, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதற்கான ஆணையை ரேகா உள்ளிட்டோரிடம் கொடுத்தார்.

    அவர்கள் அதனை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் காட்டியபோது அவை போலியானது என்பது தெரிந்தது.

    இதுகுறித்து ரேகா பழைய வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, அவரது கூட்டாளி சையத் ரஷித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    போலி ஆணையை அவர்கள் தயாரித்தது எப்படி என்று அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பெயர்களை கூறி வருகிறார்கள். எனவே அதிகாரிகளுக்கும், இதில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×