search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 21,700 கனஅடியாக குறைந்தாலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
    ஒகேனக்கல்:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு சென்றது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. இரண்டரை லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இதனால் 2 மாதங்களுக்கு மேல் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. மேலும் சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளத்தில் மெயின் அருவி தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தன. குப்பைகளும் தேங்கி கிடந்தன. குப்பைகளை அகற்றி விட்டு புதிதாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. பெண்கள் குளிக்கும் அருவி அருகே இருந்த சுவர்களும் சேதம் அடைந்து இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் சீரமைத்தனர்.

    82 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 29-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடி முதல் 15 ஆயிரம் கனஅடி வரை வந்தது. கடந்த 3 நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதியான கொள்ளேகால் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 10,700 கனஅடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை 27,500 கன அடியாக உயர்ந்தது.

    இதனால் ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் ஆயுத பூஜை விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்று நீர்வரத்து 21,700 கனஅடியாக குறைந்தது. என்றாலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இதே அளவில் நீர்வரத்து இருந்தால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒகேனக்கல் நீர் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயன்படுவதில்லை. குடிநீருக்கு மட்டுமே பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆறு பள்ளமான பகுதியில் செல்வதாலும் தருமபுரி மாவட்ட விவசாய பகுதிகள் மேடான பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த நீரை விவசாயத்திற்கு பயன் படுத்தாத நிலை இருந்து வந்தது.

    தற்போது இந்த நீரை பம்பிங் செய்து குடிநீர் தொட்டிகளில் ஏற்றி குழாய் மூலம் 238 ஏரிகளிலும், அணைகளிலும் நிரப்ப புதிய திட்டத்தை தருமபுரி மாவட்ட நிர்வாகம் மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டம் செழிப்படையும்.

    Next Story
    ×