search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும்: அமைச்சர் காமராஜ் தகவல்
    X

    ரே‌ஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும்: அமைச்சர் காமராஜ் தகவல்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
    திருவாரூர்:

    சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுவிநியோகத் திட்ட கிடங்கில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மாத ஒதுக்கீட்டின்படி நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

    அப்போது அனைத்து பொருள்களும் உரிய தரத்துடன், சரியான எடையில் இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர்வு செய்யப்பட வேண்டுமென கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அங்காடிகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும், முன்நகர்வு செய்யப்பட்டு நவம்பர் 1-ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, கையிருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    அமுதம் நியாய விலை அங்காடிகளை ஆய்வு செய்த அமைச்சர் குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். கோபாலபுரம் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தரமான அரிசி, அனைத்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

    மழை காலங்களில் கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகாமல் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
    Next Story
    ×