search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளை தொடர்ந்து பேராசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது புதிய புகார்
    X

    மாணவிகளை தொடர்ந்து பேராசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது புதிய புகார்

    மாணவிகளை தொடர்ந்து பேராசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு, பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது.

    பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 8-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, பல்கலைக்கழக விசாரணைக்குழு நேற்று கல்லூரியில் விசாரணையை தொடங்கியது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மூலம் தான் பாலியல் புகார் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடம் பல்கலைக்கழக குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கூறினர். பேராசிரியைகள் சிலரும், பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உண்மைதான். பேராசிரியர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியதால் விசாரணை குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

    கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணைக்கு பிறகு, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    Next Story
    ×