search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘தேவதை ராணி’ நீராவி ரெயில் என்ஜின்
    X
    ‘தேவதை ராணி’ நீராவி ரெயில் என்ஜின்

    ‘தேவதை ராணி’ நீராவி ரெயில் என்ஜின் - சென்னையில் மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பியது

    டெல்லி கண்டோன்மென்ட்-ரிவாரி இடையே இயக்கப்படும் 163 ஆண்டு பழமையான ‘தேவதை ராணி’ நீராவி ரெயில் என்ஜின் சென்னையில் மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பியது. #FairyQueenTrain
    சென்னை:

    163 ஆண்டை கடந்த ‘தேவதை ராணி’(பெய்ரி குயின்) என்ற பாரம்பரியமிக்க நீராவி ரெயில் என்ஜின் டெல்லி கண்டோன்மென்ட்- ரிவாரி இடையே 79 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது.

    1855-ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய இந்த நீராவி ரெயில் என்ஜின், ஆரம்பத்தில் மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா, ராணிகஞ்ச் போன்ற பகுதிகளில் தன்னுடைய சேவையை வழங்கி வந்தது.

    1909-ம் ஆண்டு தன்னுடைய பயணத்தை நிறைவு செய்த இந்த என்ஜின், 1943-ம் ஆண்டு வரை 34 ஆண்டுகாலம் ஹவுரா ரெயில் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து 1996-ம் ஆண்டு வரை ரிவாரி ரெயில் மியூசியத்தில் இருந்தது.

    1996-ம் ஆண்டில் ‘தேவதை ராணி’ நீராவி ரெயில் என்ஜினை மீண்டும் பாரம்பரிய ரெயிலாக இயக்க திட்டமிட்டு, அதற்கு புத்துயிர் அளிக்க பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டது. 1997-ம் ஆண்டு புத்துயிர் வழங்கப்பட்டு, டெல்லி கண்டோன்மென்ட்-ஆழ்வார் இடையே இயக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ‘உலகில் பழமையான நீராவி ரெயில் என்ஜின்’ என்று இடம்பெற்றது.

    அதன்பின்னர், தற்போது டெல்லி கண்டோன்மென்ட்-ரிவாரி இடையே 79 கிலோ மீட்டர் தூரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீராவி ரெயில் என்ஜின் பராமரிப்பு பணிக்காகவும், புத்துயிர் பெறுவதற்காகவும் டெல்லியில் இருந்து ஆகஸ்டு 3-ந்தேதி சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

    ஆகஸ்டு 14-ந்தேதி பராமரிப்பு மற்றும் புத்துயிர் அளிக்கும் பணிகளில் தலைமை பணிமனை மேலாளர் அருண் தேவராஜ் தலைமையில், மூத்த என்ஜினீயர் ஆனந்தன் உள்பட 11 பேர் ஈடுபட்டனர்.

    45 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணிகள், நிறைவு பெற்று, ‘தேவதை ராணி’ நீராவி ரெயில் என்ஜினுக்கு மீண்டும் புத்துயிர் வழங்கப்பட்டது. சவால் நிறைந்த இந்த பணிகளை நேர்த்தியாக ஊழியர்கள் செய்து முடித்து, பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜினை டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

    இதேபோல், 1984-ம் ஆண்டு தனது சேவையை நிறைவு செய்த நர்பதா நீராவி ரெயில் என்ஜின் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்குள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நீராவி ரெயில் என்ஜினையும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இயக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த ரெயில் என்ஜினை கழற்றி புத்துயிர் கொடுக்க இருக்கின்றனர். இதற்கான பணிகளில் தற்போது ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். #FairyQueenTrain
    Next Story
    ×