search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்-நகைகள் கொள்ளை
    X

    நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்-நகைகள் கொள்ளை

    நீடாமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அர்ச்சகர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. மேலும் கோவிலுக்குள் 2 அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலிகளை காணவில்லை.



    நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்டிருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு என்ன? என்பது பற்றி தெரியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு கமலநாதன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக பழையநீடாமங்கலம் கிராம தலைவர் பரமசிவம் அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×