search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்
    X

    கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

    கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது என்றும் இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சமூக பங்களிப்பு நிதியை முறைகேடாக கவர்னர் மாளிகை வசூலித்ததாக முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு, கவர்னர் கிரண்பேடி பதில் அளித்தார். அதில் கவர்னர் மாளிகையில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்று கூறினார்.

    இதனையடுத்து நேற்றைய தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை வெளியிட்டு அதில் சமூக பங்களிப்பு நிதி பெற கவர்னர் மாளிகையில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

    மேலும், சமூக பங்களிப்பு நிதி வசூல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் கிரண்பேடி மீது நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-


    முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு அலுவலகங்கள் நிதி பரிமாற்றங்கள் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்பதை நம்பகூட முடியாமல் இருக்கலாம். புதர்களை கொண்ட 86 கி.மீ. உள்ள 23 கால்வாய்கள் நன்கொடையாளர்கள் மூலம் எந்திரத்தைக் கொண்டு தூர்வாரப்பட்டது. இதை செய்ய அரசுக்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவு பிடித்திருக்கும். இது அரசுக்கு ஒரு பைசா கூட செலவு இல்லாமல் சமூகத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இது அவர்களுக்கு நன்றி செலுத்தி கொண்டாடப்பட வேண்டிய தருணம். ஒரு வேளை முதல்-அமைச்சர் இவ்வளவு பெரிய சமுதாய ஆதரவை அரசு சேவைக்காக ஒரு போதும் அனுபவத்தில் கொண்டிருக்கமாட்டார் போலும். நீண்ட நாள் நீர் மிகு புதுவையாக மாற்றம் காண இது ஒரு எழுதப்படுகின்ற சரித்திரம்.

    நன்கொடையாளர்களில் பலர் அடுத்த ஆண்டு முதல் ஆண்டு பராமரிப்பை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றனர். இது அவர்களுக்கு சொந்த செலவையே தரும். புதுவை இனி எப்போதும் நீர் மிகுந்தும் வளமாகவும், பசுமையாகவும் காணப்படும்.

    இதற்காக கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது. ஆனால், நமது முதல்-அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைக்கிறார். பொய் சொல்வது பாவம் என்பதை அவர் உணரவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு மாறாக நாங்கள், கவர்னர் மாளிகைக்கு வரும் பரிசு பொருட்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.

    இதில் கூட முதல்- அமைச்சர் பொய் கூறுவது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் என்னுடைய அறிவுறுத்தல்களின் படியே நடக்கிறது. இங்கு வாங்கப்படுகின்ற தனிப்பட்ட பரிசு முதற்கொண்டு அனைத்தும் திரும்ப வெளியே வழங்கப்படுகிறது. அல்லது கலைப் பொருட்களாக பாவிக்கப்படுகிறது.

    கவர்னர்மாளிகை தேவையானவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அரசின் நிதி பற்றாக்குறையை போக்க இது ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது.

    பொருளாதாரம் படைக்கப் பெற்றவர்களுக்கும், பொருளாதாரத்தில் வாடுபவர்களுக்கும் இடையே கவர்னர் மாளிகை தொடர்ந்து ஒரு பாலமாகவே செயல்படும். ஒரு வேளை, முதல்- அமைச்சர் சமுதாயமும், அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒரு நேர்மறை சேவைக்கான கலாச்சார சந்தர்ப்பத்தை கடந்த கால அனுபவத்தில் பெற்றிருக்கமாட்டார் போலும்.

    இதை கற்றுக்கொள்ள இன்னும் இது தாமதமில்லை. முதல்-அமைச்சர் அவருடைய மக்களுக்காக தன்னை மாற்றி கொள்ள வேண்டுகிறோம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    Next Story
    ×